Tuesday, December 14, 2010

ஜான்சி ராணி போல் ஜல்காரிபாய்

ஜான்சி ராணியைப் பற்றி தெரியாதவர் கிடையாது. ஜல்காரிபாயைப் பற்றி புந்தேல்கண்டுக்கு வெளியே தெரியாது என்று நினைக்கிறேன். 

 

ஜல்காரிபாய் (Mandothari) பார்ப்பதற்கு ஜான்சி ராணி லக்ஷ்மிபாயைப் போலவே இருந்தாராம். தலித் குடும்பத்தில் பிறந்தவராம். ஜான்சி கோட்டை விழும் நிலையில் இருந்தபோது ராணியை தப்பிப் போகும்படி சொல்லிவிட்டு ராணி போல வேஷமிட்டு ஆங்கிலேய தளபதி சர் ஹ்யூ ரோஸிடம் சரணடைந்தாராம். அவர் உண்மையான ராணி இல்லை என்று தெரிய ஒரு வாரம் ஆகி இருக்கிறது. அது வரை குழப்ப நிலை, ராணி தப்பி மேலும் போர் புரிந்திருக்கிறார். சர் ரோஸ் “உன்னை என்ன செய்யட்டும்” என்று கேட்டபோது ஜல்காரிபாய் தூக்கிலிடுங்கள் என்று முழங்கி இருக்கிறாராம். சர் ரோஸ் இந்தியாவின் பெண்களில் ஒரு சதவிகிதம் பேர் மட்டும் இந்த மாதிரி வீரர்களாக இருந்தால் கூட பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு ஓட வேண்டியதுதான் என்று சொன்னாராம். (ஜல்காரிபாய் ஆங்கிலேயரால் கொல்லப்பட்டாரா இல்லை விட்டுவிட்டார்களா என்று தெரியவில்லை.)

ஜல்காரிபாயைப் பற்றிய ஆதாரங்கள் கொஞ்சம் குறைவு தான். அவரைப் பற்றி சவர்க்கார் தன் புகழ் பெற்ற First War of Independence புத்தகத்தில் குறிப்பிடவில்லை. இவ்வளவு பேசியதாக சொல்லப்படும் சர் ஹ்யூ ரோசின் நாட்குறிப்பில் இவரைப் பற்றி எதுவுமில்லை. ஆனால் அவரைப் பற்றி புன்தேல்கண்டின் folklore நிறைய பேசுகிறதாம். 1951-இல் பி.எல். வர்மா என்பவர் எழுதிய ஜான்சி கி ராணி புத்தகத்திற்காக அவர் ஜல்காரிபாயின் பேரனை பேட்டி எடுத்திருக்கிறார். 1964-இல் பவானி ஷங்கர் விஷாரத் என்பவர் ஜான்சி பக்கத்தில் வாழும் “கீழ்” ஜாதி மக்களின் எழுதப்படாத கதைகளிலிருந்தும், இந்த பேட்டியை வைத்தும் ஜல்காரிபாயின் வாழ்க்கை வரலாற்றை எழுதி இருக்கிறார்.  இப்போது இந்திய அரசு ஒரு தபால்தலையும் வெளியிட்டிருக்கிறது.

ஆதாரங்கள் குறைவாக  இருந்தாலும், இப்படி ஒன்று நடந்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. ஹ்யூ ரோஸ் போன்றவர்கள் இவரை ஒரு பொருட்டாக மதித்திருக்கமாட்டார்கள். அவர்கள் கவனம் எல்லாம் தப்பிப் போன ராணி பேரில் இருந்திருக்கும். தலித்தைப் பற்றி அன்றைய மேட்டுக்குடி மக்கள் பெரிதாக எழுதி இருக்கமாட்டார்கள். 

Friday, January 8, 2010

காந்தியின் கடைசி வார்த்தை என்ன?

சுட்டுக் கொல்லப்பட்ட போது மகாத்மா காந்தி கடைசியாக சொன்ன வார்த்தைகள் என்ன
என்று ஆராய்ச்சி இப்போது நடக்கிறது.

அவர் "ராம்,ராம்" என்று அலறியபடி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார் என்றுபோலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர் "ஹே! ராம்" என்று சொன்னதாகத்தான் இதுவரைபரவலாகக் கூறப்பட்டுவந்தது.

காந்தியின் படுகொலை பற்றி தில்லியில் துக்ளக் சாலை போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை இப்போதும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
.உருது மொழியில் அந்த எப்.ஐ.ஆர். எழுதப்பட்டுள்ளது

காந்தி சுடப்பட்டதை நேரில் பார்த்த நந்தலால் மேத்தா என்பவர் கொடுத்த வாக்கு மூலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த எப்.ஐ.ஆர். எழுதப்பட்டுள்ளது.

1948 ஜனவரி 30-ம் தேதி காந்தி கொல்லப்பட்டார். பிர்லா இல்லத்தில் இருந்து பிரார்த்தனைக்காக அவர் வெளியே வந்தபோது, நாதுராம் கோட்சே என்பவர் தன்னுடைய
கைத்துப்பாக்கியால் காந்தியை 3 முறை சுட்டார். காந்தியின்  வயிற்றிலும் மார்பிலும் குண்டுகள் பாய்ந்தன. மாலை 5.10 மணிக்கு அவர் கொல்லப்பட்டார்.

பத்திரிகையாளர் தயாசங்கர் சுக்லா, காந்தி பற்றி எழுதிய புத்தகம் விரைவில் வெளிவரவுள்ளது. காந்தி சுடப்பட்ட போது அவரது பேத்தி மனு அருகில் இருந்தார்.தன் உடம்பில் குண்டு பாய்ந்தவுடன் வலியால் துடித்த காந்தி, "ஹே! ரா.. " என்றுகூறியதைக் கேட்டதாக மனு கூறியதாக அந்த புத்தகத்தில் சுக்லா எழுதியிருக்கிறார்.

காந்தியை சுட்டவுடன் அவர் "ஆ" என்று அலறினார்; "ஹே ராம்" என்று சொல்லவில்லை என அவரைக் கொன்ற கோட்சேவும் கூறியிருக்கிறார்.

குண்டு பாய்ந்த சிறிது நேரத்தில் காந்தி உயிர் துறந்தார். கொலைகாரன் கோட்சே உடனே கைது செய்யப்பட்டார்.

Search This Blog